
இலங்கைக்கான கொரிய தூதர் அதிமேதகு மியோன் லீ, இன்று காலை வலுசக்தி அமைச்சரை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தார். புதிய அரசாங்கத்தின் கீழ் வலுசக்தி அமைச்சிற்கு தனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்த அதே வேளையில், வலுவான பொது ஆணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தையும் அவர் வாழ்த்தினார். எரிசக்தி தொழிற்துறையில், குறிப்பாக மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் கொரியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை எடுத்துரைத்த தூதர் மியோன் லீ, கொரிய அரசாங்கமும் தனியார் துறையும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிய அரசாங்கம் அதன் இலக்குகளை அடைய உதவுவதில் குறிப்பாக எரிசக்தி துறையில், கொரியாவின் முழு ஆதரவையும் வழங்குமென்று அவர் உறுதியளித்தார்.
இக் கலந்துரையாடலின் போது, தென் கொரியாவின் கஷ்டங்களுக்கு மத்தியில் அடைந்துள்ள வளர்ச்சி, இலங்கையர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், பலமாகவும் இருப்பதாகவும், அவர்கள் சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் வெற்றிப் பாதையில் பாடுபடுவதாகவும் அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இலங்கை, கொரிய அரசாங்கத்திடமிருந்தும் அதன் தனியார் துறையிடமிருந்தும் நேரடி முதலீடுகளையும் கூட்டுத் திட்டங்களையும் எதிர்பார்க்கிறது என்றும், புதிய அரசாங்கத்தின் ஊழல் இல்லாத மற்றும் வெளிப்படையான பொருளாதாரக் கொள்கைகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் அதிகபட்ச நன்மைகளை வழங்கும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், புகழ்பெற்ற தென் கொரிய நிறுவனத்தில் பணிபுரிந்து கொரியாவுக்குச் சென்ற அனுபவம் கொரிய மக்களின் திறன்கள், ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்ட அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தென் கொரியா இலங்கையின் எரிசக்தித் துறை மற்றும் பிற துறைகளுக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.