இலங்கை மின்சார சபையின் (CEB) சபரகமுவ விநியோக பராமரிப்பு பிரிவில் பணியாற்றிய தொழில்நுட்ப உதவியாளர் ஜனக பிரியந்தவின் மறைவுக்கு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறார். அவர் 25 ஆம் தேதி செவனகல பகுதியில் பராமரிப்பு பணியின் போது விபத்தில் காயமடைந்து எம்பிலிப்பிட்டிய ஆதார மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
விபத்தில் காயமடைந்து கராபிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.ஏ. அஜித் குமாரவும், எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தொழில்நுட்ப பயிலுனர்; டி.எச். சமந்த புஷ்பகுமாரவும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
விபத்து குறித்து அமைச்சர் அறிந்தவுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை வசதிகள் மற்றும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் தொடர்புடைய சிரேஸ்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், தேவைப்பட்டால் இலங்கை மின்சார சபையிற்கு வெளியே இருந்து நிபுணத்துவம் மற்றும் உதவியைப் பெறவும் அவர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், தற்போது CEBக்குச் சொந்தமான அனைத்து மின்சார கோபுரங்களிலும் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளவும், மேலதிகமாக, இந்த கோபுரங்களின் பொருத்தப்பாடுகளை பரிசோதிக்கப்; பயன்படுத்தப்படும் தற்போதைய முறையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சர் CEB இன் தொடர்புடைய அதிகாரிகளுக்கு குறிப்பாக அறிவுறுத்தியுள்ளார்.