• ஆனி 18, 2025
  • kannan
  • 0

“அடுத்த இரண்டரை மாதங்களுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது. அனைத்து பெறுகை செயல்முறைகளும் இறுதி செய்யப்பட்டு டிசம்பர் வரை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெய் விநியோகம் டிசம்பர் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் எண்ணெய் நெருக்கடி அல்லது பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. அரசாங்கம் இந்த விடயத்தில் கவனமாக பரிசீலித்து, தொலைநோக்குப் பார்வையுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது இந்த நெருக்கடியில் ஈடுபட்டுள்ள நாடுகளிலிருந்து நாங்கள் எண்ணெய் இறக்குமதி செய்யவில்லை. மேலும், மோதல் மண்டலத்திற்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்தே பெரும்பாலான கொள்வனவுகள் இன்னும் மேற்கொள்ளப்படுகின்றன” என்று மத்திய கிழக்கின் போர் சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டின் பெற்;றோலிய விநியோகம் தொடர்பாக நாரஹேன்பிட்டியில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் எண்ணெய் விலைகள் அதிகரிக்குமா என்பது குறித்து ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் விலைகள் திருத்தப்படுகின்றன. இது சர்வதேச சந்தை விலைகளை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் எப்போதும் பொதுமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் எண்ணெயை வழங்க முயற்சிக்கிறோம். எண்ணெய் விலைகளைப் பொறுத்தவரை, இரண்டு மாறிகள் மட்டுமே உள்ளன. முதலாவதாக, நாட்டிற்கு எண்ணெயைக் கொண்டு வருவதற்கான செலவு, இரண்டாவதாக, களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகச் செலவுகள் மற்றும் இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனம் தக்க வைத்துக் கொண்ட இலாப வரம்பு. மக்களை மையமாகக் கொண்ட அரசாங்கமாக, எண்ணெய் விநியோகத்தை குறைந்த அல்லது எந்த இலாபமும் இல்லாமல் நிர்வகிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நாங்கள் எப்போதும் உறுதிபூண்டுள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

பரல்கள் மற்றும் பிளாஸ்டிக் குடுவைகளில்; எண்ணெயை ஊற்றுவது சட்டவிரோதமானது என்று அமைச்சர் மேலும் கூறினார். தேவையற்ற பயத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் எண்ணெயை சேமித்து வைப்பது பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும், எண்ணெய் விநியோகிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் அமைச்சர் இவ் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.