
மகாவலி ஆற்றின் நீரை உபயோகித்து 30.2 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு இணைக்கும் இறுதி நீர்மின் திட்டமாகக் கருதப்படும் மொரகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடி நேற்று (13) பார்வையிட்டுள்ளார். மேலும், தற்போது இவற்றின் நிர்மாணப் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. கொத்மலை-புதிய பொல்பிட்டிய 220kV/132kV மின்சார பரிமாற்றல் பாதையையும் அவர் பார்வையிட்டுள்ளார்.
மாலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலான உச்ச நேரங்களில் மின்சார விநியோகத்தின் நிலையானதன்மையைப் பராமரிக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மொரகொல்ல திட்டம், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தேசிய மின்கட்டமைப்போடு இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகாவலி ஆற்றின் குறுக்கே 237 மீட்டர் நீளமும் 37 மீட்டர் உயரமும் கொண்ட அணை கட்டப்பட்டு வருகிறது. இவ் அணைக்கட்டின் 3 கி.மீ நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக அனுப்பப்படும் தண்ணீரை உபயோகித்து இரண்டு 15.1 மெகாவாட் விசையாழிகள் மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படும். இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்பில் இணைக்கப்படும்.
மகாவலி நீர்மின்சார வளாகத்தையும் லக்சபான நீர்மின்சார வளாகத்தையும் இணைக்கும் வகையில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும்; கொத்மலை- புதிய பொல்பிட்டிய 220kV/132kV மின்சார பரிமாற்றல் பாதை தேசிய மின்கட்டமைப்பின் நிலையான தன்மையைப் பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CEB யின் பொறியாளர்கள், உள்நாட்டு நிபுணர்கள் மற்றும் நிர்மாண நிறுவனங்களால் கூட்டாக மேற்கொள்ளப்படும் இந்த நிர்மாணத்திட்டம் அமைச்சரின் சிறப்புப் பாராட்டைப் பெற்றுள்ளது. மொரகொல்ல நீர்மின்சார திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் திரு. கெமுனு ரணசிங்க, CEB இன் துணைப் பொது முகாமையாளர் (மின்சார பரிமாற்றல், நிர்மாணத் திட்டங்கள்) திரு. நிஷாந்த கருசிங்க மற்றும் CEB இன் சிரேஸ்ட அதிகாரிகள் குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.