கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் நடவடிக்கைகளுக்கான வசதிகள் விரிவாக்கம்
கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் (Bunkering) செயற்பாடுகளுக்குத் தேவையான குழாய் அமைப்புகள் மற்றும் வசதிகளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையம் இணைந்து விரிவாக்கியுள்ளன.
இதுவரை கொழும்பு துறைமுகத்தில் குறைந்த அளவிலான குழாய் அமைப்புகள் மற்றும் எண்ணெய் ஏற்றும் வசதிகள் மட்டுமே காணப்பட்டதால், கப்பல் எண்ணெய் செயல்பாடுகளில் பல சவால்கள் ஏற்பட்டிருந்தன. இந்த நிலையைத் தீர்க்க, புதிய அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் முதல் கட்டமாக, கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்குதுறையில் புதிய குழாய் அமைப்பும் எண்ணெய் ஏற்றும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையில் கப்பல் எண்ணெய் சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனத்தின் மூலம், இந்த வசதியை பயன்படுத்தி முதல் முறையாக கப்பல் எண்ணெய் விநியோகம் இன்று (22) மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர், இதுவரை கொழும்பு துறைமுகத்தில் கப்பல் எண்ணெய் நடவடிக்கைகள் டால்பின் இறங்குதுறை வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும், அதே இறங்குதுறை நாட்டின் எண்ணெய் இறக்குமதிக்கும் பயன்படுத்தப்பட்டதால் கப்பல் எண்ணெய் எரிபொருள் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையை அடையாளம் கண்டு, தெற்கு இறங்குதுறை வழியாக கப்பல் எண்ணெய் எரிபொருள் வழங்கும் மாற்று குழாய் இணைப்பை உருவாக்கியதன் விளைவாக, இன்று முதல் முறையாக அந்த வழியில் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது கடல்சார் மையமாக நாட்டை மாற்றும் அரசாங்கத்தின் திட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்த முயற்சியில் வலுசக்தி அமைச்சு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை பெற்றோலியக் களஞ்சிய முனையம் ஆகியவை துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த ஒருங்கிணைந்த முயற்சி அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.
