• புரட்டாதி 4, 2025
  • Uyaam Maalik
  • 0

தேசிய மின்கட்டமைப்பை வலுப்படுத்தும் புதிய ஹபரணை மின்கட்ட நிலையம் திறப்பு – வலுசக்தி அமைச்சர் மற்றும் ஜப்பான் தூதர் பங்கேற்பு

தேசிய மின்கட்டமைப்பை வலுப்படுத்தி நிலைநிறுத்தும் முக்கிய கட்டமாக, சிலோன் மின்சார சபைக்கு சொந்தமான புதிய மின்கட்ட நிலையம் ஹபரணையில் 16 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்டு இன்று (03) வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதர் திரு. இஸோமடா அகியோ அவர்களும் பங்கேற்றனர்.

146 கிலோமீட்டர் நீளமுடைய 220 kV ஹபரணை–வெயாங்கொடா மின் பரிமாற்றத் திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இந்த புதிய மின்கட்ட நிலையம் கருதப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதும், பரிமாற்றத் திறனை அதிகரிப்பதும், மின் விநியோகத்தின் நம்பகத்தன்மையை உயர்த்துவதும், பரிமாற்ற இழப்புகளை குறைப்பதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களாகும்.

குறைந்த எதிர்ப்பு கொண்ட (Low-loss conductor) மின் கம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், குறைந்த ஆற்றல் இழப்புடன் மின்சாரம் பரிமாற்றம் செய்யப்படுவது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். மேலும், நொரோச்சோலை மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை விநியோகிக்க கூடுதல் பாதை உருவாக்கப்பட்டுள்ளதால், முழு மின்துறை அமைப்பின் நிலைத்தன்மை மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி ஏற்பட்ட மின்தடை சம்பவத்திற்குப் பின்னர், முன்பு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டிருந்தால் அந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்காது என்பதைக் கருத்தில் கொண்டு, இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தாமதமடைந்த திட்டங்களை வேகப்படுத்தி, மின்துறை நிலைத்தன்மையை உறுதி செய்ய புதிய சிருஷ்டிப்பான திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

ஜப்பான் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு வலுசக்தி அமைச்சர் தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்ததுடன், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. இசோமடா அகியோ அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள், நாட்டின் எதிர்கால முதலீடு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிக்க ஜப்பான் அரசாங்கம் கொண்டுள்ள தயார்நிலையை பிரதிபலிப்பதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதனையடுத்து, ஜப்பான் அரசாங்கத்திற்கும் ஜப்பான் மக்களுக்கும் தனது உளமார்ந்த நன்றியையும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. இசோமடா அகியோ அவர்கள், மின்துறையின் அடித்தள வசதிகளை மேம்படுத்துதல், மின்துறை சீர்திருத்தங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட துறைகளுக்கு உதவியை வழங்கும் வகையில், இலங்கைக்காக ஒரு குறிப்பிட்ட அபிவிருத்தி உதவிக் கொள்கையை ஜப்பான் தயாரித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பரஸ்பர நன்மை தரும் முதலீடுகள் மற்றும் நிலையான, நேர்மையான கூட்டாண்மையின் மூலம், இலங்கையின் சமூக அபிவிருத்திக்காக இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் எனவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி, இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் W. எடுசூரிய உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்