மீள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமாக ஹைட்ரஜன் பயன்பாட்டிற்கு முழுமையான அரச ஆதரவு வழங்கத் தயாராக உள்ளது
இலங்கையின் மீள புதுப்பிக்கத்தக்க ஹைட்ரஜன் கொள்கை வரைவு தொடர்பான பங்குதாரர் ஆலோசனைக் கலந்துரையாடலின் தொடக்க நிகழ்வு இன்று (18) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, நாட்டின் ஆற்றல் இலக்குகளை அடைவதற்காக புதிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அதிகபட்சமாக பயன்படுத்துவதுடன், நவீன தொழில்நுட்பங்களையும் முன்னேற்றமான நடைமுறைகளையும் செயல்படுத்துவது அரசாங்கம் பின்பற்றும் அடிப்படை அணுகுமுறையாகும் என தெரிவித்தார்.
“எமது நாடு மிக உயர்ந்த மீள புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைக் கொண்டதாக உள்ளது. அவற்றை தேசிய மின் வலையமைப்புடன் ஒருங்கிணைப்பதற்கான திறனை மேம்படுத்தும் வகையில், மின்சார பரிமாற்றம், சேமிப்பு வசதிகள் மற்றும் தேவையான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகின்றோம்,” என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் அவர், “எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்காக ஹைட்ரஜன் பயன்பாடு மிக முக்கியமானதாக அமையும். இதனடிப்படையில், ஒரு கொள்கை வரைவை தயாரிப்பது முக்கியமான முதல் படியாகும். இந்தப் பங்குதாரர் ஆலோசனைக் கலந்துரையாடல், அந்த கொள்கை வரைவை உருவாக்கும் செயல்முறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். குறிப்பாக, இலங்கை அறிஞர்கள் உட்பட, மேம்பட்ட நாடுகளில் நீண்ட காலமாக இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் சர்வதேச நிபுணர்களின் பங்களிப்பைப் பெறுவது ஒரு சாதனையாகும். இதற்காக பல்வேறு வழிகளில் பங்களித்து வரும் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் நிபுணர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பணிமனை, வலுசக்தி அமைச்சும் இலங்கை நிலபெறுதகு வலு அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன், அதில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் குடிமான விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் துணை நிரந்தர பிரதிநிதி மரினா டென், இலங்கை பெறோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆனந்த ராஜகருணா, இலங்கை நிலபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார, இலங்கை அணுஆற்றல் சபையின் தலைவர் டாக்டர் துஷார ரத்நாயக்க, இலங்கை பெற்றோலியம் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் நீல் டி சில்வா, இலங்கை பெறோலியக் கூட்டுத்தாபனத்தின் முகமைத்துவ பணிப்பாளர் டாக்டர் மயூர நேத்திக்குமாரகே, இலங்கை மின்சார சபையின் பொது முகமையாளர் டாக்டர் நரேந்திர டி சில்வா உள்ளிட்ட பல துறை நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
