மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தேசிய நிகழ்ச்சியின் அத்தியாவசிய அங்கமாகும் – சவால்கள் எதுவாயினும் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்
மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்றும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு பிரச்சினைகளும் உரிய கவனத்துடன் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றும், மீள புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி என்பது ஒரு தேசிய அவசியமாகவும் தேசிய நிகழ்ச்சியின் அங்கமாகவும் இருப்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் இன்று (04) காலி – ஹியாரே பகுதியில் அமைந்துள்ள 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையத் திட்டத்தின் திறப்பு விழாவில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் அவர், “இதே போன்று, இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு செயன்முறையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மின்சாரத் துறையின் அரசுடைமையை உறுதிப்படுத்துவதை அரசின் கொள்கையாகக் கொண்ட அரசாக நாம் செயல்பட்டு வருகின்றோம். ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்துக் கொண்டு, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இயன்றளவு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, நல்ல நம்பிக்கையுடனும் திறந்த அணுகுமுறையுடனும் இந்த நிகழ்ச்சியை நாம் ஆரம்பித்தோம். நாட்டின் ஆற்றல் துறையின் இலக்குகளை அடைவதற்கு, இந்த மறுசீரமைப்பு திட்டத்தை அமுல்படுத்துவது தவிர்க்க முடியாததாகும். ஆகையால், இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
இத்திட்டம், இலங்கையின் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் Pan Asian Power PLC நிறுவனத்தின் துணை நிறுவனமான PAP EGSS SOLAR (Private) Limited நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில், இலங்கை நிலபெறு தகு வலு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ விக்ரமசிங்க, அக்மீமன பிரதேச சபைத் தலைவர் சுகத் ஆனந்த, Pan Asian Power PLC நிறுவனத்தின் தலைவர் லக்ஷ்மந்த சில்வா உள்ளிட்ட பல மதிப்பிற்குரிய விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
