• ஆவணி 29, 2025
  • Uyaam Maalik
  • 0

மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மலிவு, நம்பகமான மற்றும் உயர்தர ஆற்றல் தீர்வுகளை வழங்குவதே எமது அரசாங்கத்தின் நோக்கம் – சக்திவள முகாமைத்துவ அமைப்புகள் மாநாட்டில் (EnMS Forum 2025) வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி

தொழில்துறைகளில் சக்திவள செயல்திறனை அதிகரிப்பதும், அதிக காபன் வெளியீடு கொண்ட உயிர்இந்தனப் பயன்பாட்டை குறைக்கும் திறன் மற்றும் ஆற்றலை வளர்த்திடுவதும், இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் அறிவை விரிவுபடுத்துவதும் ஆகிய நோக்கங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட சக்திவள முகமைத்துவ அமைப்புகள் மாநாடு – 2025 (EnMS Forum 2025) என்ற ஒருநாள் மாநாடு இன்று (29) கொழும்பு Cinnamon Life வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் முக்கியமாக பங்கேற்றார்.

ஐக்கிய நாடுகள் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு (UNIDO) ஏற்பாடு செய்தும், Accelerating Industries Climate Response (AICRSL) திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மலிவு, நம்பகமான மற்றும் உயர்தர சக்திவள சேவைகளை வழங்குவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் எனத் தெரிவித்தார்.

மேலும், உலகளாவிய காபன் வெளியீட்டாளர்களில் இலங்கை 89வது இடத்தில் இருப்பதையும், ஒருவருக்கான காபனீர் ஒட்சைட் வெளியீடு 0.88 மெட்ரிக் தொன்களாக உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் விரிவடையும் போது காபன் வெளியீடுகளும் அதிகரிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை, தொழிற்துறையில் 13 சதவீதமும், சக்திவள துறையில் 25 சதவீதமும் காபன் வெளியீடுகளை குறைப்பதற்கான உறுதிப்பாட்டை கொண்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

மேற்கண்ட இலக்குகளை அடைவதில் AICRSL திட்டம் முக்கிய பங்கு வகித்து வருவதாகவும், இதற்காக பங்களிப்பு வழங்கும் அனைத்து நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மேலும், நிலைத்த அபிவிருத்தி இலக்குகளுடன் இணங்க, அனைத்து குடிமக்களுக்கும் நம்பகமான, வசதியான, மலிவு மற்றும் உயர்தர ஆற்றல் சேவைகளுக்கான அணுகல் உறுதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலத்தீவு பிரதிநிதி டாக்டர் யோஹான் ஹெஸ்ஸே, UNIDO பிரதிநிதி மற்றும் தென் ஆசிய துணை பிராந்திய அலுவலக பணிப்பாளர் டாக்டர் பசினி கிறிஸ்தியானோ, இலங்கை நிலபெறுதகு வலு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர ஜே. பண்டார, பணிப்பாளர் நாயகம் திரு. ஹர்ஷ விக்கிரமசிங்க உள்ளிட்ட பல சர்வதேச சக்திவள நிபுணர்கள் கலந்து கொண்டனர்