மின்துறையின் முன்னய தனியார் மயமாக்கல் மீட்புக்கான புதிய அரசாங்கத் திட்டத்திற்கு தொழிலாளர்களும் உண்மையான தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குதல் அவசியம்– வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி
மின்துறை மறுசீரமைப்பு திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக, குறிப்பாக இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கவலைகளை மையமாகக் கொண்டு, வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி அவர்களுக்கும், இலங்கை மின்சார சபை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (02) காலை ஒரு விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், மின்சார சபை ஊழியர்களின் கருத்துகள், விமர்சனங்கள் மற்றும் குறைகள் இயன்றவரை கருத்தில் கொள்ளப்பட்டு, மறுசீரமைப்பு செயல்முறை முழுவதிலும் எழுந்த பிரச்சினைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதே அணுகுமுறை எதிர்காலத்திலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், 100 சதவீத அரசுடமை கொண்ட நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், சட்ட விதிகளுக்கமைய ஊழியர்களுக்கு முன்அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் விளக்கினார். இந்தச் செயல்முறையில் ஏதேனும் தெளிவின்மை அல்லது குறைபாடுகள் காணப்பட்டால், அவற்றை கலந்துரையாடலின் மூலம் தீர்க்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், நாட்டின் நிறுவனச் சட்டத்தின்படி, நிறுவனங்கள் சட்டரீதியாக “(Private) Company” என குறிப்பிடப்படுவது வழக்கமான நடைமுறையாகும் என்றும், இதனை தனியார்மயமாக்கலாக தவறாக சித்தரித்து சிலர் ஊழியர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே உண்மையான நிலைமை குறித்து ஊழியர்களை சரியான முறையில் அறிவுறுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், தகவல் பரிமாற்றத்திற்கான முறையான மற்றும் திறமையான அமைப்பு அவசரமாக தேவைப்படுவதாக தெரிவித்தனர். தகவல்கள் போதியளவில் பகிரப்படாத காரணத்தால் ஊழியர்களிடையே குழப்ப நிலை உருவாகியுள்ளதாகவும், இதனால் தொழிற்சங்கங்களிடம் பல கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தற்போதுள்ள செயல்முறையிலோ சட்ட அமைப்பிலோ காணப்படும் குறைபாடுகள், அல்லது குறுகிய காலத்திற்குள் அதிக பணிச்சுமை காரணமாக கவனிக்கப்படாமல் போன விடயங்கள் இருப்பின், அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மேலும், ஊழியர் நியமனங்கள், ஊழியர் சேமநிதி மற்றும் ஓய்வூதிய நிதிக்காக நிறுவப்படவுள்ள நிறுவனங்கள் தொடர்பாகவும், முந்தைய கலந்துரையாடலில் தொழிற்சங்கங்கள் கோரிய கூட்டு ஒப்பந்தத்திற்கான குழு தொடர்பாகவும் அமைச்சர் விளக்கினார். தொழிற்சங்க மட்டத்தில் தேவையான தகவல்கள் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியதுடன், இந்தச் செயல்முறையை வெற்றிகரமாக நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைப்பது அல்லது தன்னார்வ ஓய்வு திட்டம் தொடர்பான விவரங்கள், சட்ட விதிகளுக்கமைவாக எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார். முந்தைய அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்தை மாற்றி, மின்துறையின் அரசுடமைத் தன்மையை உறுதி செய்யும் புதிய அரசாங்கத் திட்டத்திற்கு தொழிலாளர்களும் உண்மையான தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். முன்னுதாரணமற்றதும் சிக்கலானதுமான இந்தச் செயல்முறையை வெற்றிகரமாக முன்னெடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என அவர் கூறினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் துணைச் செயலாளர் திரு. ஜயந்த குணரத்தின, நாட்டின் மின்துறையில் அதிகமான ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமாக, இந்த மறுசீரமைப்பு திட்டத்தை தங்களது சங்கம் சாதகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார். தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை செய்து செயல்படுவதையும், முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதையும் அவர் பாராட்டினார்.
இக்கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, மின்துறை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் மின்பொறியியலாளர் புபுடு நிரோஷன் உள்ளிட்ட பல மின்துறை தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
