• புரட்டாதி 15, 2025
  • Uyaam Maalik
  • 0

மின்சாரச் சட்டம் திருத்தப்படவில்லை என்றால் 12,000 மின்சார சபை ஊழியர்கள் வேலை இழந்திருக்கக் கூடும் – ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தியபடியே மின்சாரத் துறையை அபிவிருத்தி செய்வோம்

முன்னைய அரசாங்கம் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் மின்சாரத் துறையை தனியார்மயமாக்க மேற்கொண்ட திட்டத்தை தோற்கடித்ததோடு மட்டுமல்லாமல், அதனை முழுமையாக மாற்றியமைக்கவும் தற்போதைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்தார்.

அவர் இன்று (15) அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக தேவையான கட்டமைப்பு மாற்றங்களுடன், நூறு சதவீத அரசின் உடமையிலுள்ள நிறுவனங்களை நிறுவும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனால் திட்டமிட்டபடி செயல்படுவதற்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

“மின்சாரத் துறையில் அரசு உரிமையை உறுதி செய்துள்ளோம். குறிப்பாக, ஊழியர்களின் உரிமைகள், சலுகைகள் மற்றும் வேலைப் பாதுகாப்பு ஆகியவை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியிலேயே, மின்சாரத் துறையின் அபிவிருத்திக்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்,” என அமைச்சர் கூறினார்.

மேலும், தொழிற்சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் போது, குறிப்பாக இலங்கை மின்சாரத் தொழிலாளர் சங்கம் உட்பட பல சங்கங்கள் முன்வைத்த யோசனைகள் கவனமாக ஆராயப்பட்டுள்ளதாகவும், நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய கோரிக்கைகள் ஏற்கனவே வலுசக்தி அமைச்சு, மின்சாரத் துறை சீர்திருத்தச் செயலாளர் அலுவலகம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் இணைந்த நடவடிக்கையினூடாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், முழுமையான அரசுடமை கொண்ட நான்கு நிறுவனங்களில் பணியமர்த்தப்படவுள்ள ஊழியர்களுக்கு அது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வேலைப் பாதுகாப்பு குறித்து எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

“இந்த நிறுவனங்களில் இணைவதை விரும்பாத ஊழியர்களுக்காக தன்னார்வ ஓய்வுத் திட்டம் (Voluntary Retirement Scheme) வழங்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி அவசியமான ஒன்றாகும். எவரையும் கட்டாயமாக வேலை இழக்கச் செய்ய அரசாங்கம் விரும்பவில்லை. அதற்காக, நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இழப்பீட்டு சூத்திரத்தைவிட மேலான நன்மைகளை வழங்கும் இழப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் எங்களுக்கு மிகவும் மதிப்பிற்குரியவர்கள்,” என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், நியாயமான மற்றும் நடைமுறைசார்ந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அடிப்படை அற்ற மற்றும் நியாயமற்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, ஊழியர்களை தவறாக வழிநடத்தி தேவையற்ற பிரச்சினைகள் உருவாக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நியாயமானதும் செயல்படுத்தக்கூடியதும் ஆன கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. கடந்த காலத்தில் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளோம்,” என அவர் கூறினார்.

மேலும், மின்சாரச் சட்டம் திருத்தப்படாமல், முன்னைய அரசாங்கத்தின் நடைமுறைகள் தொடர அனுமதிக்கப்பட்டிருந்தால், 12,000 இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வேலை இழந்திருக்கக் கூடும் என்றும், மின்சார சபை 12 தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

“சில தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் உண்மையில் ஊழியர்களின் நலனுக்காகவா, அல்லது ஊழியர்களை வேலை இழக்கச் செய்து அதை அரசியல் பிரச்சினையாக மாற்றும் முயற்சியா என்பதைக் கேட்க விரும்புகிறேன்,” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

“மக்களின் அரசாக, ஒவ்வொரு ஊழியரையும் நாம் பொறுப்பேற்கிறோம். ஊழியர்களின் நலனும் எதிர்காலமும் எங்களுக்கு முதன்மை. அதே சமயம், நாட்டின் ஆற்றல் துறையின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் கடமையாகும். குறுகிய நோக்கங்களால் அல்ல, விரிவான பார்வையுடன் துறையின் முன்னேற்றத்திற்காக செயல்படுவதில் நாம் உறுதியாக உள்ளோம்,” என அமைச்சர் வலியுறுத்தினார்.

ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சீர்திருத்தச் செயல்முறை நடைப்பெற்று வந்தாலும், எந்தவொரு ஊழியரின் உரிமைகள் அல்லது சலுகைகளை பறிக்கும் வகையிலான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றும், அதே நேரத்தில் நாட்டிற்கு இடையறாத மின்சார விநியோகத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்தார். இதனை அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டு பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஆற்றல் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, இலங்கை மின்சார சபையின் பொது முகமையாளர் பொறியியலாளர் டபிள்யூ. எடுசூரிய மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தச் செயலாளர் அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. புபுது நிரோஷன் ஹடிகல்லகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.