• புரட்டாதி 20, 2025
  • Uyaam Maalik
  • 0

மிருகப் பராமரிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட சூரிய மின்திட்டம் ஒரு முன்மாதிரி திட்டம்! இதுபோன்ற திட்டங்களை ஏனைய தொழிலதிபர்களும் பின்பற்ற வேண்டும்

மிரிகமப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கால்நடை (கோழி வளர்ப்பு) பண்ணையில், Galaxy Renewable Company நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 2 மெகாவாட் திறன் கொண்ட கூரைச் சூரிய மின் நிலையத்தின் திறப்பு விழா நேற்று (19) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி, மிருகப் பராமரிப்புடன் மீள புதுப்பிக்கத்தக்க சக்தயை ஒருங்கிணைத்துள்ள இந்தத் திட்டம் ஒரு முன்மாதிரி முயற்சியாகும் என பாராட்டுத் தெரிவித்தார்.

“இந்த சூரிய மின் நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், கோழி வளர்ப்பு கூடங்களின் கூரைகளில் சூரிய பலகைகளை நிறுவி, மிருகப் பராமரிப்புடன் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை ஒருங்கிணைத்திருப்பதே ஆகும். இதுபோன்ற ஒரே வகைத் திட்டமாக இது காணப்படுகிறது. மேலும், இத்திட்டம் சில இளம் தொழில்முனைவோரின் கூட்டாண்மையினூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவும், இதில் கலந்து கொள்ள நான் விசேட ஆர்வம் கொண்டிருந்தேன்,” என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர், “உயர் மக்கள் அடர்த்தி கொண்ட நாடாகிய எமது நாட்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற மிக முக்கியமான துறைக்கே கூட பரந்த நிலப்பரப்புகளை ஒதுக்குவது கடினமாக உள்ளது. இத்தகைய சூழலில், விவசாயம் மற்றும் மிருகப் பராமரிப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட சூரிய மின் திட்டங்கள் இரட்டைப் பயனை வழங்குவதோடு, நிலம் மற்றும் கட்டிடங்களை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துகின்றன. ஆகையால், கோழி வளர்ப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த வகைச் சூரிய மின் திட்டங்கள் குறித்து துறையிலுள்ள ஏனைய தொழிலதிபர்களும் விழிப்புணர்வு பெற்று, இதுபோன்ற திட்டங்களை ஆரம்பித்தால், அது நாட்டிற்கு பெரும் நன்மையை வழங்கும். அந்த வகையில், இந்தத் திட்டம் ஒரு சிறந்த முன்மாதிரியாகும்,” எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், இவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரத்தை அந்தந்த பண்ணைகளின் தினசரி செயற்பாடுகளுக்குப் பயன்படுத்த முடிந்தால், தேசிய மின் வலையமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக தற்போது அமுலில் உள்ள கட்டுப்பாடுகளைத் தவிர்க்கவும், சேமிப்பு மின்கல அமைப்புகள் போன்ற கூடுதல் முதலீடுகளைத் தேவையாக்கும் திட்டங்களுக்கு பதிலாக, வேறு முதலீடுகளுக்கு வழிவகுக்கவும் உதவும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் “செழிப்பான நாடு – அழகிய வாழ்க்கை” கொள்கைகளுடன் ஒத்திசைவாக நாட்டின் ஆற்றல் இலக்குகளை அடைவதற்கு, பாரம்பரிய சிந்தனை முறைகளைத் தாண்டிய புதிய அணுகுமுறைகள், புதிய செயல்முறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வது அத்தியாவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்ரிய விஜேசிங்க, மிரிகம பிரதேச சபைத் தலைவர் சுமித் ரத்நாயக்க, Galaxy Renewables நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் தனுக லியனகமகே, பணிப்பாளர்கள் டாக்டர் பிரணீத் விக்ரமாரச்சி மற்றும் பொறியியலாளர் துசித விதானகே உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.