• ஐப்பசி 13, 2025
  • Uyaam Maalik
  • 0

இலங்கை மின்சார சபை (CEB) தொழிற்சங்கங்களுடன் வலுசக்தி அமைச்சர் கலந்துரையாடல்

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நிகழ்ச்சியைத் தொடர்பாக, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (13) மாலை, வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், உழைக்கும் மக்களின் தேவைகளை நன்கு புரிந்து கொண்ட அரசாக, இந்த மறுசீரமைப்பு நிகழ்ச்சி முழுவதும் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காலந்தோறும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இயன்றளவு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அமைச்சர் என்ற வகையில், தொழிற்சங்க நடவடிக்கைகள் ஏற்பட்டாலும் அமைதியான அணுகுமுறையுடன் பதிலளிப்பதே தனது கொள்கை எனவும், பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையை தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் போது, தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததற்காகவும், மீதமுள்ள கோரிக்கைகளையும் அமுல்படுத்த பரிசீலிக்க ஒப்புக்கொண்டதற்காகவும், வலுசக்தி அமைச்சர் மற்றும் அரசாங்கத்திற்கு தங்களின் நன்றியைத் தெரிவித்தனர். மேலும், தற்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்கள், நாளை ஒன்று கூடி, நடைபெற்று வரும் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் உடன்பாடுகளின் அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும், அதன் பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலில், மின்சாரத் துறையைச் சேர்ந்த பெருமளவான தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், இலங்கை மின்சாரச் சட்டத்தின் படி மின்சாரத் துறைக்காக புதிதாக நிறுவப்பட்ட நான்கு நிறுவனங்களின் பணிப்பாளர்களும் பங்கேற்றனர்.