• புரட்டாதி 8, 2025
  • Uyaam Maalik
  • 0

மீள புதுப்பிக்கத்தக்க சக்தி மின்சார பரிமாற்ற மையமாக செயல்படவுள்ள சம்பூர் புதிய மின்சார வலையமைப்பு துணை நிலையத்திற்கு வலுசக்தி அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தேசிய மின்சார வலையமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் நிலையானதன்மையை மேலும் மேம்படுத்தும் நோக்குடன், குறிப்பாக மீளபுதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மிகுந்துள்ள நாட்டின் கிழக்கு பிரதேசங்களில் மின் பரிமாற்ற அமைப்புகளை அபிவிருத்தி செய்து வலுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சம்பூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய மின்சார வலையமைப்பு துணை நிலையத்திற்கான அடிக்கல்லை அண்மையில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்கள் நாட்டினார்.

இந்த மின் வலையமைப்பு துணை நிலையத்தின் நிர்மாணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், கிழக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை தேசிய மின் வலையமைப்புடன் இணைக்கும் முக்கிய மையமாக இது செயல்படவுள்ளது. இதன் மூலம் கிழக்கு மாகாணம் முழுவதும் மின்சார விநியோகத்தை அதிகரிப்பதுடன், தொழில்துறைகள் மற்றும் இல்லங்களுக்கு இடையறாததும் நம்பகமானதுமான மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ், 220 கிலோவோல்ட் திறன் கொண்ட சம்பூர்–கப்பல்துறை (Kappalthurai) மின்சார பரிமாற்றல் பதை நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அடுத்த கட்டமாக கப்பல்துறையிலிருந்து ஹபரணை வரை சுமார் 77 கிலோமீட்டர் நீளமுடைய மின்சார பரிமாற்றல் பதை அமைக்கப்பட உள்ளது.

அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் சமமாக அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பிரதான இலக்காகும் எனத் தெரிவித்தார். அந்த இலக்கை அடைவதில் மின்சார விநியோகம் மிக முக்கியமானதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், சுற்றுச்சூழல் நிலைமைகளும் புவியியல் அமைப்பும் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்திக்கு ஏற்றதாக உள்ள சம்பூர் பிரதேசத்தின் முழுமையான திறனை அதிகபட்சமாகப் பயன்படுத்துவது, நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய பெரிதும் உதவும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தத் திட்டத்திற்குத் தேவையான திறமைமிக்க மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை நியமிக்கும் போது, இந்தப் பிரதேச மக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்குமாறும், அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்துமாறும் நிர்மாணப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில், இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகமையாளர் (திட்டங்கள்), திட்ட பணிப்பாளர் (சம்பூர்), துணை பொது முகமையாளர் கிழக்கு மாகாணம்), திட்ட முகமையாளர் (சம்பூர்) உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.