வலுசக்தி அமைச்சர் பொறியியலாளா. குமரெ ஜெகொடி ஹம்பாந்தோட்டாவில் நடைப்பெற்று வரும் 5MW / 10.7MWh உலர்மின்கல சக்தி சேமிப்பு திட்டத்தின் கட்டுமான முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்
சூரிய மின்சக்தி உற்பத்தி உச்சத்தில் இருக்கும் பிற்பகல் நேரங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து, மின்சார தேவையுயரும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேசிய மின் வலையமைப்பிற்கு வெளியிடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள, இலங்கையின் முன்னோடி 5 மெகாவாட் / 10.7 மெகாவாட்-மணி (MWh) திறன் கொண்ட உலர்மின்கல சக்தி சேமிப்பு அமைப்பு (Battery Energy Storage System – BESS) திட்டத்தின் கட்டுமான முன்னேற்றத்தை, வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி அவர்கள் அண்மையில் ஆய்வு செய்தார்.
ஹம்பாந்தோட்டாவில் நடைப்பெற்று வரும் இந்தத் திட்டம், குடியரசு கொரியா அரசாங்கம் வழங்கிய அமெரிக்க டொலர் 11.9 மில்லியன் பெறுமதியுடைய விசேட மானிய நிதியுதவியின் கீழ் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. பகல் நேரங்களில் குறைந்த செலவில் உற்பத்தியாகும் சூரிய மின்சாரத்தை சேமித்து, மின்சார தேவையுயரும் இரவு நேரங்களில் தேசிய மின் வலையமைப்பிற்கு வழங்குவதன் மூலம், குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பகல் நேரங்களில் மின்சார தேவையைக் காட்டிலும் அதிக அளவில் சூரிய மின்சக்தி வழங்கப்படுவதனால் மின் வலையமைப்பில் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மையைத் தவிர்க்கும் ஒரு நடைமுறைச் தீர்வாகவும் இந்தத் திட்டம் அமைகின்றது.
சமீப காலங்களில் பதிவான மின் வலையமைப்பு நிலையற்ற தன்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கான தீர்வாகவும், சூரிய சக்தி பயன்பாட்டை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய கட்டமாகவும் இவ்வகைத் திட்டங்களுக்கு வலுசக்தி அமைச்சர் விசேட கவனம் செலுத்தி வருகின்றார். அதனடிப்படையிலேயே இந்த ஆய்வுப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம், இவ்வருட இறுதிக்குள் முழுமையாக நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
